இந்தியாவுக்கு வந்த முதல் ஊமை படம் – ‘இயேசுவின் வாழ்க்கை ‘, 1896 ஆம் ஆண்டு பம்பாயில் தொடர்ந்து நான்கு வருடங்கள் ஓடியது.
இயேசுவின் வாழ்க்கை படத்தை கொண்டு வந்தவர் டூபாண்ட் என்கிற பிரெஞ்சுக்காரர்.

திருச்சிக்கும் இந்த படத்தை கொண்டு வந்தபொழுது,டூபாண்டு அவசரமாக தனது சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலையில்,
அவரை சந்தித்து ருபாய் இரண்டாயிரம் ருபாய் கொடுத்து ,படச்சுருளையும் கருவியையும் வாங்கி கொண்டார்,’சாமிக்கண்ணு வின்சென்ட்’.

அதுவரை ரயில்வேயில் வேலை செய்து கொண்டு இருந்த,’சாமிக்கண்ணு வின்சென்ட்’ அந்த வேலையை உதறிவிட்டு,டூபாண்டு செய்த வேலையை ஊர் ஊராக கொண்டு சென்றார்.ஆங்காங்கே ‘டேரா’ போட்டு படம் காட்டியதால் இதற்கு,
‘டென்ட் சினிமா’
டூரிங் சினிமா ‘
என்றெல்லாம் பெயர் வர காரணமா இருந்தன.

ஆரம்ப நாட்களில்,சினிமா படங்கள் சில பிரதிகளே தயாரிக்கப்பட்டதால், அந்த படங்கள் டூரிங்கில் சினிமா டென்ட்டுடன் ஊர் ஊராக கொண்டு போகப்பட்டன.பிறகு படத்தயாரிப்பு அதிகரித்த சமயத்தில்,டூரிங் ஒரே ஊரிலேயே தங்கி அதிக நாட்கள் படங்கள் திரையிடப்பட்டன.இதன் தொடர்ச்சியாக தான் நிரந்தர தியேட்டர் உருவாகின.

‘சாமிக்கண்ணு வின்சென்ட்’ தனது சொந்த ஊரான கோவையில் 1914 ஆம் ஆண்டு நிரந்தர தியேட்டர் கட்டினார்.’வெரைட்டி ஹால்’ என்ற பெயரில் தோன்றிய அந்த தியேட்டர் தான்,தென்னிந்தியாவின் முதல் தியேட்டர்.

அதன் பின் வந்த ஊமை படங்களில்,வசனமும் பாடல்களும் இல்லாததால்,குதித்தல்,தாவுதல்,குத்துசண்டை,கத்தி சண்டை ,குதிரைசவாரி என்று மசாலாக்கள் நிறைந்த படங்களாக தான் தயாரிக்கப்பட்டன. படம் திரையிடப்படும்பொழுது இடையிடையே,கவர்ச்சி நடனங்கள்,தேகபயிற்சி மற்றும் விகடகச்சேரி என விதவிதமான வித்தைகளை வைத்து படத்தை ஓட வைத்தார்கள்.

1916 முதல் 1932 ஆம் ஆண்டு வரை சுமார் 108 ஊமை படங்கள் தயாரிக்கப்பட்டன.படங்கள் பேசாதாதால் மக்களுக்கு தெரிந்த மரபு கதைகளான ‘கோவலன்’,’நல்லதங்காள்’, ‘நந்தனார்’ போன்ற மக்களுக்கு தெரிந்த கதைகளை தான் அதிகமாக தயாரிக்கப்பட்டன.

ரசிகர்களுக்கு பிடித்தது,சண்டை படங்கள் தான்.அந்த சமயத்தில் பிரபலமான ஸ்டண்ட் கதாநாயகனாக வலம் வந்தவர்கள்,’பாட்லிங் மணி’,’ஸ்டண்ட் ராஜு’.

இந்த திடகாத்திரமான சாகச நாயகனின் மகன் தான்,நோஞ்சான் நடிகர் ‘லூஸ் மோகன்’.

ஊமை படங்களின் வரலாறு இப்படி இருக்க, அதை தொடங்கிய ‘சாமிக்கண்ணு வின்சென்ட்’ 1942 ஆம் ஆண்டில் மறைந்தார்,அதன் பின் அவரது குடும்பத்தினர் வருடம் தோறும் ‘சாமிக்கண்ணு வின்சென்ட் அகாடமி அவார்ட்ஸ்’ என்ற பெயரில் விருது வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.மத்திய அரசாங்கமும் அவரை பெருமைப்படுத்தும் வகையில், 2017 ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உரை வெளியிட்டது.

 

சீனிவாஸ் திவாரி / Srinivas Tiwari.